Wednesday, June 18, 2008

வாழும் பெரியார்

பார்ப்பனராய் அல்லாதார் நாமென்னும் நல்லுணர்வைப்
படிக்கின்ற பருவத்தே ஆசானாம் கணபதியும்
போர்க்குணமே மிக்கவராம் வே.ஆனைமுத்துவிற்குப்
புரிகின்ற படிநன்கு புகட்டிவிட்டார்; "பாலதனை
வார்க்கின்ற வர்காலைப் பதம்பார்த்து வருணமெனும்
வஞ்சகத்துப் புற்றினிலே வாழ்ந்துவரும் பாம்புகளே
பார்ப்பனர்கள்" என்பதனைப் பாருக்கு உணர்த்திட்டார்
பகுத்தறிவுப் பகலவனாம் பார்போற்றும் நம்பெரியார்!

எடுத்ததொரு கொள்கையினில் எந்நாளும் பிடிப்போடு
இருப்பதெனும் உறுதியுடன் இருப்பவராம் ஆனைமுத்து
அடுத்ததொரு முடிவெடுத்தார் அருந்தலைவர் பெரியாரின்
அனல்பறக்கும் கழகத்தில் அவர்தன்னை இணைத்திட்டார்!
அடுத்திருந்து பெரியாரின் அறிவுரையை அவர்பேச்சை
அவரெழுத்தை அணுஅணுவாய் உள்வாங்கி உரம்பெற்றார்
கெடுக்கின்ற அரசியலின் கொடுஞ்சட்டந் தன்னைக்கொளுத்திக்,
கொடுத்ததொரு பரிசாகச் சிறைவாழ்வும் அவர்ஏற்றார்!

எப்போதும் களம் நிற்கும் வீரருக்குப் பின்னாலே
தப்பாமல் அவர்துணைவி நின்றிடுவார் பெரும்பாலும்
ஒப்பாக இவருக்கும் வாய்த்தனளோர் நற்றுணைவி
செப்பிடலாம் அம்மையினை மார்க்சுக்கு ஜென்னியென
தப்பின்றி எழுவர்க்குச் சுசீலாவும் தாயானார்
தடையின்றித் தம்கணவர் கொள்கைக்குத் துணையானார்
முப்பொழுதும் அப்பொழுதும் இப்பொழுதும் அவருக்கு
முதன்மனைவி அவர்கொள்கை; அடுத்ததுதான் தானானார்!

யானையதைப் பார்த்ததொரு குருடரைப்போல் பலரிங்கு
பெரியாரைப் பார்க்கின்றார் பலவாறு பகர்கின்றார்
ஆனைமுத்து ஒருவர்தான் அவர்நெறியை அவர்கருத்தைச்
சரியாகச் சொல்கின்றார் சரியாகச் செய்கின்றார்!
தேன்மட்டும் உறிஞ்சுதற்குத் தெரியாத வண்டனையோர்
தேவையின்றி மலரின்மேல் தினந்தினமோர் பழிதெளிப்பார்
வான்முட்டும் அளவிற்கு வழங்கிவைத்த கருத்தெல்லாம்
"ஈ.வெ.இரா. சிந்தனையாய்" அவரன்றோ தொகுத்தளித்தார்!

நாடெங்கும் மக்களுக்குக் கல்வியினில் வேலைதனில்
நல்லதொரு இடம் கிடைக்க நாளெல்லாம் பாடுபட்டார்
ஓடிவட நாடெல்லாம் ஒதுக்கீட்டுத் தோச்சுடரை
ஓயாமல் ஏற்றிட்டார் ஓய்வின்றித் தானுழைத்தார்
வாடிவிடா மல்பெரியார் கொள்கைகளைக் காப்பதற்கு
வளமான "சிந்தனையாளன்" ஏடு நடத்துகிறார்
நாடியவர் கருத்தறிந்து நாமெல்லாம் தோள்கொடுத்தால்
தேடிவரும் தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சியன்றோ!

பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் பலரிங்கு
பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் திராவிடத்தார்
பெரியாரின் பெயர்சொல்வார் பொதுவுடைமைத் தோழருமே
பெரியாரின் பெயர்சொல்லிப் பேசாதார் எவருமில்லை
பெரியாரை விலைபேசி விற்காதார் எவருமில்லை
பெரியாரியல் வெற்றிக்கு எவரிங்குத் தோள்கொடுப்பார்?
ஆனைமுத்து! அவரேதான் வாழுகின்ற நம் பெரியார்!
---பாவலர் வையவன்
(நன்றி சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர் -2006)

No comments: